ஸ்லோகம் 99
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவிரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பசுபாச-வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜநவான்
தேவியை வழிபடுபவன் கல்வி செல்வம் அழகு ஆயுள் இவையனைத்தும் நிரம்பியனாவான்
(பேரின்பம்)
(த்வத் பஜனவான்) உன்னைப் பூஜிப்பவன் (விதி-ஹரி-ஸபத்ன) பிரம்மாவும் விஷ்ணுவுங்கூடப்
பொறாமைப் படக் கூடியவனாய் (ஸரஸ்வ்த்யா) கல்வியுடனும் (லக்ஷ்ம்யா) செல்வத்துடனும் (விஹரதே)
இன்பத்தை எய்துகிறான். (ரம்யேண வபுஷா) மன்மதன் போன்ற உடல் அழகால் (ரதே:) ரதி தேவியின்
(பாதிவ்ரத்யம்) கற்பையும் (சிதிலயதி) கலங்கச் செய்கிறான். (க்ஷபித-பசு-பாச-வ்யதிகர:)
பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாய் (பரானந்த-அபிக்யம்) பேரானந்தம்
எனப் பிரசித்தி பெற்ற (ரஸம்) இன்பரஸத்தை (ஸிரம் ஜீவன்னேவ) சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டு
(ரஸயதி) அனுபவிக்கிறான்.
அம்பாளுடைய பரிபூர்ண கடாக்ஷத்தால் ஒப்புயர்வற்ற கல்வி, செல்வம், அழகு ஆகிய
மூன்றும் பக்தனுக்கு ஏற்படுவது இங்கு வர்ணிக்கப்படுவது.
முதலில் ஸரஸ்வதி என்று இந்த ஸ்லோகம் ஆரம்பித்து இருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. எதைக் கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்பு தேவி கொடுப்பாள். ஏகாந்த பக்தி அம்பிகையிடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு? பிரம்மா வீட்டில் அது ஸம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாஸகனுக்கு அதை விட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும். – காமகோடி சங்கராச்சாரியார்.

No comments:
Post a Comment