Wednesday, September 2, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 10

 

ஸ்லோகம் பத்து

ஸுதாதாராஸாரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸ:!

அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகதிப-மத்யுஷ்ட-வலயம்

ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி !!10!!

மூலாதாரம் (சரீர சுத்தி, வீர்ய விருத்தி)

(சரண-யுகள-அந்தர்-விகிலிதை:) திருஷ்டிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும் (ஸுதா-தாரா-ஆஸாரை:) அமிருத தாரையின் பிரவாகத்தால் (ப்ரபஞ்சம்) ஐம்பூதங்களாலான் உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் (ஸிஞ்சந்தீ) நனைப்பவளாய் (ரஸ-ஆம்னாய-மஹஸ:) அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து (வாம்) உனது (பூமிம்) இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை (புன: அபி) மறுபடியும் (அவாப்ய) அடைந்து (புஜக-நிபம்) பாம்பைப் போல் (அத்யுஷ்ட-வலயம்) குண்டலவடிவாக (ஸ்வம்) உன்னுடைய (ஆத்மானம்) உருவத்தை (க்ருத்வா) செய்து கொண்டு (குஹரிணி) சிறுதுவாரமுடைய (குலகுண்டே) மூலாதார குண்டத்தில் (ஸ்வபிஷி) உறங்குகிறாய்.

முன் ஸ்லோகத்தில் குண்டலினீ சக்தியின் ஆரோஹணம் சொல்லப்பட்டது,. இங்கு அவரோஹணம் சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தைப் பெருக்கி அதனால் உடலில் உள்ள எல்லா நாடிகளையும் நனைத்து விட்டு மீண்டும் மூலாதாரத்திற்கு தேவி வருகிறாள்.

குலகுண்டம் – ‘கு’ என்றால் பிருதிவீ தத்துவம். அது மூலாதாரத்தில் லயமடைவதால் மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும். அதின் நடுவில் தாமரையில் இருப்பது போல் ஒரு கிழங்கு இருப்பதாகவும் அதின் நடுவில் ஒரு ஸூக்ஷ்மமான துவாரம் இருப்பதாகவும் அதில் தலையை வைத்துக் கொண்டு மூன்றரை வட்டவடிவில் குண்டலமிட்டுக் கொண்டு தாமரை நூல் போல் மெல்லிய பிழம்புவடிவில் குண்டலினீ சக்தி உறங்குவதாகவும் கூறப்படுகிறது.

(அம்ருதஸ்ய  தாரா பஹுதா தோஹமானம் சரணம் நோ லோகே ஸுதிநாம் ததாது) தேவியின் சரணமகலங்களில் இருந்து பெருகும் அமிருத தாரை பக்தர்களாகிய நம்மைச் சிறந்த புத்தியுடையவர்களாக்கிப் போஷிக்கட்டும். (ஆருணம்)

பக்தன் பத்மாஸத்தில் அமர்ந்து கும்பகப் பிராணாயாமம் செய்து ஸ்ரீவித்யா பீஜத்தை மானஸீகமாக ஆவிருத்த்ஹி செய்தால் குண்டலினீ சக்தி உறக்கம் விட்டெழுந்து ஆறு சக்கரங்களையும் கடந்து ஸஹாஸ்ராரத்தில் திவ்யரூபத்தோடு காட்சியளிப்பாள்.



சௌந்தயலஹரி ஸ்லோகம் ஒன்பது

 

ஸ்லோகம் ஒன்பது

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி||

மனோSபி ப்ரூமத்யே ஸ்கலமபி பித்வா குலபதம்

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே||

 

ஆதாரசக்கரங்கள், (தேசாந்தரம் சென்றவர் திரும்பி வருதல், அஷ்டைச்வர்யஸித்தி)

(மூலாதாரே) மூலாதாரத்தில் (மஹீம்) பிருதிவீதத்துவத்தையும் (மணிபூரே) மணிபூரத்தில் (கம் அபி) ஜல தத்துவத்தையும் (ஸ்வாதிஷ்டானே) ஸ்வாதிஷ்டானத்தில் (ஸ்திதம்) இருக்கும். (ஹுதவஹம்) அக்னி தத்துவத்தையும் (ஹ்ருதி) இருதயத்தில் அனாஹதத்தில் (மருதம்) வாயுதத்துவத்தையும் (உபரி) அதற்குமேல் விசுத்தியில் (ஆகாசம்) ஆகாச தத்துவத்தையும் (ப்ரூ-மத்யே) புருவ நடுவில் ஆக்ஞையில் (மனோSபி) மனஸ் தத்துவத்தையும் (ஸகலம் குல பதம் அபி) இவ்வாறாக ஸுஷும்னா மார்க்கத்தில் உள்ள எல்லா சக்கரங்களையும் (பித்வா) ஊடுருவிச் சென்று (ஸஹஸ்ராரே பத்மே) ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் (ரஹஸி) இரகசியமான இடத்தில் (பத்யா ஸஹ) உனது பதியாகிய ஸதாசிவனுடன் (விஹரஸே) கூடி மகிழ்கிறாய்.



சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 8

 

ஸ்லோகம் எட்டு

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே

மணித்வீபே தீபோபவனவதி சிந்தாமணி-க்ருஹே

சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலயாம்

பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் !!8!!

தேவியின் சிந்தாமணிக்ருஹம் (ஜனனமரண நிவிருத்தி)

(ஸுதா-சிந்தோ) அமிர்தக்கடலின் (மத்யே) நடுவில் (ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே) கல்பக விருக்ஷத் தோப்புகளால் சூழப்பட்ட (மணித்வீபே) ரத்னத்தீவில் (தீப-உபவனவதி) கதம்பமரங்கள் நிறைந்த உத்யான வனத்துடன் கூடிய (சிந்தாமணி-க்ருஹே) சிந்தாமணிக்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே) பரமமங்கள வடிவமான சிம்மாஸனத்தில் (பரமசிவ-பர்யங்க-நிலயாம்) பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும் (சிதானந்தலஹரீம்) ஞானானந்தக்கடலின் அலைபோன்ற (த்வாம்) உன்னை (தன்யா:) புண்ணியவான்களான (கதிசன) சிலரே (பஜந்தி) வழிபடுகிறார்கள்.

ஸுதாஸிந்தோர்-மத்யே:

இங்கே தேவியின் வாசஸ்தானமான சிந்தாமணிக்ருஹம் வர்ணிக்கப்படுகிறது. அது ஸகலப் பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் இரத்தினத்தீவில் உள்ளது. அதின் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. அவை வரிசையாக இரும்பு, எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோஹம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திர நீலம், முத்து, மரகதம், பவழம், நவரத்தினம், நானாரத்தினம், இவற்றாலும் மனம் புத்தி அஹங்காரம் ஆகிய தத்துவங்களாலும் சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. எட்டாவது பிரகாரத்தில் உள்ளது கதம்ப வனம். அங்கு பரதேவதையின் மந்திரிணியான சியாமளாதேவி வசிப்பாள். பதினைந்தாவது பிரகாரத்தில் அஷ்டதிக்குப் பாலகர்கள் வசிப்பர். பதினாறாவது ஸேனா நாயகி தண்டினீ அல்லது வாராஹியின் இருப்பிடம். இங்கும் சியாமளாதேவிக்கு ஒரு கிருஹம் உண்டு. பதினேழாவதில் யோகினிகள் வசிப்பர்; பதினெட்டில் மஹாவிஷ்ணு; பத்தொன்பதில் ஈசானன்; இருபதில் தாராதேவி; இருபத்தொன்றில் வாருணீ; இருபத்திரெண்டாவது அகங்காரம் கோட்டையில் குருகுல்லா தேவி; இருபத்து மூன்றாவது சூரியப் பிரகாரத்தில் மார்த்தாண்ட பைரவர், இருபத்தி நாலில் சந்திரன்; இருபத்தைந்தாவது சிருங்கார வனத்தில் மன்மதன். இதற்குள் மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷத் தோப்பும் அதன் நடுவில் சிந்தாமணி க்ருஹம். அதன் அக்னி மூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத்துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணீ தண்டினீ தேவிகளின் க்ருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவலிருப்பர். இதனுள் நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீசக்ரம், ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்து பீடத்தில் பஞ்சப்பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள்.

பஞ்சப்பிரம்மாஸனமாவது, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும் ஸதாசிவனுடைய மடியையே மேல் பலகையாகவும் கொண்ட கட்டில். இதுவே ‘அ-உ-ம- அர்த்த மாத்திரை –பிந்து’ வடிவான ஓங்கார மஞ்சம்.






சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...