Wednesday, September 2, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 8

 

ஸ்லோகம் எட்டு

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே

மணித்வீபே தீபோபவனவதி சிந்தாமணி-க்ருஹே

சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க-நிலயாம்

பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம் !!8!!

தேவியின் சிந்தாமணிக்ருஹம் (ஜனனமரண நிவிருத்தி)

(ஸுதா-சிந்தோ) அமிர்தக்கடலின் (மத்யே) நடுவில் (ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே) கல்பக விருக்ஷத் தோப்புகளால் சூழப்பட்ட (மணித்வீபே) ரத்னத்தீவில் (தீப-உபவனவதி) கதம்பமரங்கள் நிறைந்த உத்யான வனத்துடன் கூடிய (சிந்தாமணி-க்ருஹே) சிந்தாமணிக்ருஹத்தில் (சிவாகாரே மஞ்சே) பரமமங்கள வடிவமான சிம்மாஸனத்தில் (பரமசிவ-பர்யங்க-நிலயாம்) பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும் (சிதானந்தலஹரீம்) ஞானானந்தக்கடலின் அலைபோன்ற (த்வாம்) உன்னை (தன்யா:) புண்ணியவான்களான (கதிசன) சிலரே (பஜந்தி) வழிபடுகிறார்கள்.

ஸுதாஸிந்தோர்-மத்யே:

இங்கே தேவியின் வாசஸ்தானமான சிந்தாமணிக்ருஹம் வர்ணிக்கப்படுகிறது. அது ஸகலப் பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் இரத்தினத்தீவில் உள்ளது. அதின் வெளிப்பிரகாரங்கள் இருபத்தைந்து. அவை வரிசையாக இரும்பு, எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோஹம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திர நீலம், முத்து, மரகதம், பவழம், நவரத்தினம், நானாரத்தினம், இவற்றாலும் மனம் புத்தி அஹங்காரம் ஆகிய தத்துவங்களாலும் சூரியன், சந்திரன், மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. எட்டாவது பிரகாரத்தில் உள்ளது கதம்ப வனம். அங்கு பரதேவதையின் மந்திரிணியான சியாமளாதேவி வசிப்பாள். பதினைந்தாவது பிரகாரத்தில் அஷ்டதிக்குப் பாலகர்கள் வசிப்பர். பதினாறாவது ஸேனா நாயகி தண்டினீ அல்லது வாராஹியின் இருப்பிடம். இங்கும் சியாமளாதேவிக்கு ஒரு கிருஹம் உண்டு. பதினேழாவதில் யோகினிகள் வசிப்பர்; பதினெட்டில் மஹாவிஷ்ணு; பத்தொன்பதில் ஈசானன்; இருபதில் தாராதேவி; இருபத்தொன்றில் வாருணீ; இருபத்திரெண்டாவது அகங்காரம் கோட்டையில் குருகுல்லா தேவி; இருபத்து மூன்றாவது சூரியப் பிரகாரத்தில் மார்த்தாண்ட பைரவர், இருபத்தி நாலில் சந்திரன்; இருபத்தைந்தாவது சிருங்கார வனத்தில் மன்மதன். இதற்குள் மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷத் தோப்பும் அதன் நடுவில் சிந்தாமணி க்ருஹம். அதன் அக்னி மூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத்துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணீ தண்டினீ தேவிகளின் க்ருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவலிருப்பர். இதனுள் நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீசக்ரம், ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்து பீடத்தில் பஞ்சப்பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள்.

பஞ்சப்பிரம்மாஸனமாவது, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும் ஸதாசிவனுடைய மடியையே மேல் பலகையாகவும் கொண்ட கட்டில். இதுவே ‘அ-உ-ம- அர்த்த மாத்திரை –பிந்து’ வடிவான ஓங்கார மஞ்சம்.






No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...