ஸ்லோகம் 65
ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசித-கர்ப்பூரசகலா
விலீயந்தே மாதஸ்த்வ வதன-தாம்பூல-கபலா
தேவியின் தாம்பூல மகிமை (வெற்றி, வாக்விலாஸம்)
(மாத:) தாயே! (ரணே) போரில் (தைத்யான்) அசுரர்களை (ஜித்வா) வென்று (நிவ்ருத்தை:)
திரும்பியவர்களும் (அபஹ்ருத-சிரஸ்த்ரை:) தலைப்பாகையை நீக்கியவர்களும் (கவிசிபி) கவசம்
பூண்டவர்களும் (சண்டாம்ச-) சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய (த்ரிபுரஹர-நிர்மால்ய-) பரமசிவ
நிர்மால்யத்தில் (விமுகை:) நோக்கமில்லாதவர்களுமான (விசாக இந்த்ர-உபேந்த்ரை) தேவஸேனாபதியான
ஸுப்ரஹ்மணியர், தேவர்களின் அரசனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு ஆகியோரால் (சசி:)
சந்திரனைப் போல் (விசத-) வெண்மையான (கர்ப்பூரசகலா:) பச்சைக் கற்பூரத்தூளுடன் கூடிய
(தவ) உன்னுடைய (வதன-தாம்பூல-கபலா) வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்கள் (விலீயந்தே)
விழுங்கப்படுகின்றன.
அபஹ்ருத சிரஸ்த்ரை:- அம்பாளிடம் தேவாசுர யுத்தத்தில் வெற்றிச் செய்தியை
சொல்ல யுத்தத்தில் இருந்து நேராகக் கவசம் தலைப்பாகைகளுடன் வந்ததால் தலைப்பாகையை மட்டும்
கழற்றி விட்டு நமஸ்கரித்தனர்.
உபஹ்ருத சிரஸ்த்ரை என்ற அருணா மோதினீ பாடத்தில் தோற்கடிக்கப்பட்ட வீரர்களின்
தலைப்பாகைகளை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டு வந்தார்கள் எனக் கருத்து.
விசாகேந்த்ரோபேந்த்ரை: (குமார மஹேந்த்ர-விஷ்ணவபிதானை:புத்ரை) ஸ்கந்தர்,
இந்திரர், விஷ்ணு ஆகியய் எல்லோருமே தேவியின் புத்திரர்கள் தான். அம்பாளுடைய தாம்பூலத்தில்
கலந்திருந்த வெண்மையான பச்சைக் கற்பூரம் இவர்களுக்குப் பிரஸாதமாகக் கிடைத்தது.
சண்டாம்ச:- சிவ நிர்மால்யம் சண்டிகேசுவரர் என்ற பக்தருக்கே முதன்மையாக உரியது.
மற்றவர்களுக்கு அது உரியதன்று என்று சாஸ்திரம் கூறுவதின் கருத்து சாதாரண மக்களுக்கு
அதை ஏற்றுக் கொள்ளப் போதுமான ஆசாரம் இல்லை என்பதேயாம். அதே கருத்தினால் தான் போரில்
இருந்து கவசங்களைக் கூட கழற்றாமல் வந்த சமயத்தில் தேவ ஸேனாபதியான குமாரப் பெருமானும்
மற்றவர்களும் கூட சிவனிடம் அந்த வேஷத்தில் செல்லக் கூசித் தாயின் ஸந்நிதிக்குச் சென்றனர்.
தாயின் அன்பு ஆசாரக் குறைவைப் பொருட்படுத்துவதில்லை.

No comments:
Post a Comment