Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 51

 

ஸ்லோகம் 51

 

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா

ஸரோஷா சங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ |

ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜனனீ

ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா ||

 

தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள் (ஸர்வ ஜன வச்யம்)

 

(ஜனனி) தாயே! (சிவே) சிவனிடத்தில் (தே) உன்னுடைய (த்ருஷ்டி) பார்வை (ச்ருங்கா-ஆர்த்ரா) காதலின் கசிவுள்ளதாயும் (தத் இதர ஜனே) அவரைத் தவிர மற்றவர்களிடத்தில் (குத்ஸன-பரா) அருவருப்புடையதாயும் (கங்காயாம்) கங்கா தேவியிடம் (ஸரோஷா) கோபத்துடன் கூடியதாயும் (கிரிச-சரிதே) சிவனுடைய லீலைகளில் (விஸ்மயவதீ) வியப்புடையதாயும் (ஹர-அஹீப்ய:) சிவன் அணியும் பாம்புகளிடம் (பீதா) பயமுடைய தாயும் (ஸரஸிருஹ-ஸௌபாக்ய ஜனனீ) தாமரையின் அழகுக்கும் அழகு செய்வது போன்று சற்றுச் சிவந்திருப்பஹ்டால் வீரரஸமுடையதாயும் (ஸகீஷு) தோழிகளிடத்தில் (ஸ்மேரோ) ஹாஸ்யரஸமுடையதாயும் (மயி) என்னிடம் (ஸகருணா) கருணையுடன் கூடியதாயும் விளங்குகிறது.

 

பரமேஸ்வரனுடைய நெற்றிக்கண் மன்மதனை எரித்த கண். அதனால் அவருடைய வைராக்கியம் தெரிகிறது. இப்பொழுது தேவியிடம் காமம் அதே கண்ணில் தோன்றுகிறது. இரண்டையும் எண்ணி தேவி ஆச்சரியத்தை அடைகிறாள். ‘கிரிச சரிதே’ என்ற பாடத்தில் பரமசிவன் செய்த த்ரிபுர ஸம்ஹாரம் முதலிய லீலைகளை எண்ணி ஆச்சரியத்தை அடைகிறாள் என்று கருத்து.

 

இங்கு ச்ருங்காரம், பீபத்ஸம், ரௌத்ரம், அத்புதம், பயானகம், வீரம், ஹாஸ்யம், கருணை என்ற எட்டு ரஸங்கள் தேவியினுடைய த்ருஷ்டியில் கூறப்படுகின்றன. (சாத்தஸ்ய நிர்விகா ரசவாத் ந சாந்தம் மேனிரே ரஸம்) சாந்தரஸம் மனம் விகாரமற்று இருக்கும் நிலையைக் குறிப்பதால் அதை ரஸமாகக் கொள்ளக் கூடாதென்று பரதர் கூறுவதையொட்டி இங்கும் எட்டு ரஸங்கள் தான் வர்ணிக்கப்படுகின்றன. ஸரஸிருஹ-ஸௌபாக்ய-ஜனனி என்ற பாடத்தில் தாமரையின் அழகை ஜயித்தவள் எனக் கருத்து.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...