Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 16

 

ஸ்லோகம் 16


 

கவீந்த்ராணாஞ் சேத: கமலவன-பாலாதப-ருசிம்

பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா-மேவ பவதீம்!

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ

கபீராபிர்-வாக்பிர்-விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ

 

அருணா மூர்த்தி (வேதாகம ஞானம்)

 

(கவீந்த்ராணாம்) கவியரசர்களுடைய (சேத: கமலவன-பால-ஆதப-ருசிம்) சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதயசூரியன் போல் பிரகாசிப்பவளும் (அருணால் ஏவ) அதனால் அருணா எனப்பெயர் பெற்றவளும் ஆகிய (பவதீம்) உன்னை (யே) எந்த (கதிசித்) சில (ஸந்த:) புண்ணியவான்கள் (பஜந்தே) பூஜிக்கிறார்களோ (அமீ) அவர்கள் (விரிஞ்சி ப்ரேயஸ்ய:) பிரம்ம பத்னியான ஸரஸ்வதியின் (தருண-தர-) செழிப்பு மிக்க (ச்ருங்காரலஹரீ) சிருங்கார ரசத்தின் பிரவாகம் போன்ற (கபீராபி) கம்பீரமான (வாக்பி:) வாக்குகளால் (ஸதாம்) ஸாதுக்களுக்கு (ரஞ்ஜனம்) மகிழ்ச்சியை (விதததி) அளிக்கிறார்கள்.

 

தேவியைச் சிகப்பு வர்ணமாகவும் எட்டுக் கைகளுடனும் இருதயத்தில் தியானிப்பது இங்கு கூறப்படுகிறது. பாசம், ஈட்டி, கரும்புவில், புஷ்ப பாணங்கள், புஸ்தகம், ஸ்படிகமாலை ஆகியவற்றையும் அபயம் வரம் என்ற முத்திரைகளையும் எட்டுக் கைகளில் தரித்து மூன்று கண்களுடன் விளங்குகிறாள். இவ்வடிவம் ஸத்வத்தில் ரஜோ குணப்பிரதாமான ஸரஸ்வதி ரூபம். ப்ராஹ்மீ முதலான மாத்ருகா ரூபங்கள் எல்லாம் தேவியினுடையவே.

அருணாக்யாம் பகவதீம் அருணாபாம் விசிந்தயேத்!

பாசாங்குசதராம் தேவீம் தனுர்பாணதராம் சிவாம்!

வரதாபய-ஹஸ்தாஞ் ச புஸ்தகாக்ஷஸ்ரகன்விதாம்!

அஷ்டபாஹும் த்ரிநயனாம் கேலந்தீம் அம்ருதாம்புதௌ!!

                                          (வாமகேச்வரதந்த்ரம்)

 

இந்த ரூபத்தை உபாஸிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாய் விளங்குவார்கள். இதற்கு உதாரணம் மஹாகவி காளிதாஸன். ஒருநாள் போஜராஜன் (குஸுமே குஸுமோத்பத்தி: ச்ரூயதே ந ச த்ருச்யதே) பூவில் பூவின் உற்பத்தி கேட்கப்படுகின்றது, காணப்படவில்லை என்று ஒரு சுலோகத்தின் முன்பாதியைக் கூறிப் பின்பாதியை ஸபையிலுள்ள எவரேனும் பூர்த்தி செய்யலாம் என்று கூறினான். மற்ற வித்வான்கள் ஒன்றும் தோன்றாமலிருக்க காளிதாஸன் அருகிலிருந்த ஒரு அழகிய தாசியைப் பார்த்து ‘(பாலே தவமுகாம்போஜே த்ருஷ்டம் இந்தீவரத்வயம்) காணப்படுகிறது’ என்று கூறினான். அரசனும் ஸபையோரும் சிருங்காரம் நிறைந்த அச் சொல்லைக் கேட்டு ஆச்சரியமும் ஆனந்தமும் எய்தினர். தேவியின் அருள் அப்படி தங்கு தடையற்ற கவிதா சக்தியை அளிப்பது.

 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...