ஸ்லோகம் 22
பவானி த்வம் தாஸே மயி விதர த்ரிஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமித ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மருட-நீராஜித-பதாம்
ஸ்தோத்ர மகிமை (ஸர்வஸித்தி)
(பவானி) பவன் எனப்பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்தினியே (த்வம்) நீ (தாஸே மயி)
அடிமையாகிய என்னிடத்தில் (ஸகருணாம்) கருணையுடன் கூடின (த்ருஷ்டிம்) பார்வையை (விதர)
செலுத்தி அருள்வாயாக. (இதி) என்று (ய:) எவனாவது ஒருவன் (ஸ்தோதும்) துதி செய்ய (வாஞ்சன்)
விரும்பி (‘பவானி த்வம்’ இதி ‘பவானி! நீ’ என்ற இரண்டு வார்த்தைகளை (கதயதி) சொன்னால்
(ததைவ) அப்போதே (த்வம்) நீ (தஸ்மை) அவனுக்கு (முகுந்த-ப்ரஹ்ம-இந்த்ர-ஸ்புடமுகுட-நீராஜிதபதாம்)
விஷ்ணு பிரம்மா இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய
(நிஜ-ஸாயுஜ்ய பதவீம்) உனது ஸாயுஜ்யப் பதவியை (தசஸி) அளிக்கிறாய்.
பவானி த்வம் – ‘பவானி’ எனும் பதம் தேவியை அழைக்கும் பதமாக பக்தன் உபயோகித்திருந்தாலும்,
அதை (லோட் எனும்) வினைச் சொல்லாகக் கொண்டால் ‘நான் ஆவேன்’ எனப் பொருள்படும்.
‘பவானி த்வம்’ என்றால் ‘நீயாகவே நான் ஆகின்றேன்’ (ப்ரஹ்மைவாஹமஸ்மி) என்ற
வேதாந்த மகாவாக்கியத்தின் கருத்தைக் கூறியதாக ஆகிறது. அப்படிப்பட்ட ஞானமுள்ளவன் மோக்ஷத்திற்கு
அதிகாரியாகிறான். தேவி கருணையால் ‘பவானி த்வம்’ என்று கூறுபவனை அவ்வித அதிகாரியாக ஏற்றுத்
தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய ஸாயுஜ்யப் பதவியை அவனுக்கும் அளிக்கிறாள்.
தேவியின் அருளைப் பெறுவதற்கு பூஜை ஜபம் ஹோமம் முதலிய கிரியைகளை விட ஒருமித்த கருத்துடன்
அவளைத் துதித்தாலே போதும் என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
தேவிபாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கீழே காணலாம்
அஸ்பஷ்டமபி யந்நாம ப்ரஸங்கேனாபி பாஷிதம்
ததாதி வாஞ்சிநா-னர்த்தான் துர்லபானபி ஸர்வதா!!
தெளிவில்லாமலோ வேறு பேச்சுக்களுக்கு இடையிலோ தேவியின் நாமம் உச்சரிக்கப்பட்டாலும்
கூட உச்சரித்தவன் விரும்பிய பொருள்களை, அவை கிடைத்ததற்கு அரிதாயினும் அம்பிகையானவள்
எப்போதும் அளிப்பாள்.

No comments:
Post a Comment