ஸ்லோகம் 37
விசுத்தௌ தே சுத்தஸ்படிக-விசதம் வ்யேம-ஜனகம்
சிவம் ஸேவே தேவீமபி சிவஸமான-வ்யவஸிதாம் |
யயோ: காந்த்யா யாந்த்யா : சசிகிரண – ஸாரூப்யஸரணே:
விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதி ||
விசுத்தி சக்கரத்தில் பார்வதீ பரமேஸ்வர த்யானம்
(பிரம்மராக்ஷஸ பூதப்ரேத பிசாச நிவாரணம்)
(தே) உன்னுடைய (விசுத்தௌ) விசுத்தி சக்கரத்தில் (சுத்த ஸ்படிக-விசதம்) தெளிவான
பளிங்கு போன்ற வடிவினரும் (வ்யோம-ஜனகம்) ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவரும் ஆகிய
(சிவம்) சிவனையும் (சிவ-ஸமான வ்யவஸிதாம்) சிவனுடைய ஸங்கல்பத்திற்கு ஒத்த ஸங்கல்பமுடையவனாகிய
(தேவிம் அபி) தேவியாகிய உன்னையும் (ஸேவே) சேவிக்கிறேன். (யயோ:) எவர்களிடமிருந்து (சசி-கிரண-ஸாரூப்ய:ஸரணே:)
வெண்ணிலா போன்று (யாந்த்யா:) வெளிவரும் (காந்த்யா:) ஒளியினால் (ஜகதீ) உலகம் முழுதும்
(விதூத-அந்தர்-த்வாந்தா) அக்ஞானமாகிய அக இருள் ஒழியப் பெற்றதாய் (சகோரீ இவ) நிலவில்
களிக்கும் சகோர பக்ஷி போல் (விலஸதி) விளங்குகிறதோ – அப்படிப்பட்ட உங்களை ஸேவிக்கிறேன்.
குறிப்பு:
ஒரு புஷ்பத்திலே எப்படிச் சுகந்தமானது சேர்ந்திருக்கிறதோ, அமிருதத்திலே
சுவை எப்படி கலந்திருக்கிறதோ, அந்த மாதிரி ஈசுவரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபம்
கலந்திருக்கிறது. அக்னியோடு சேர்ந்திருக்கும் பிரகாசத்தை அக்னி வேறு, பிரகாசம் வேறு,
என்று எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படி ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க முடியாது.
அந்த மாதிரி இவர்களைச் சேர்த்து செய்யும் தியானம் இதிலும் இனி வரும் சுலோகங்களிலும்
விளக்கப்படுகிறது.

No comments:
Post a Comment