Monday, September 7, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதினொன்று

 

ஸ்லோகம் பதினொன்று

 

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி

ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:

சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய

த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: !!11!!

 

ஸ்ரீசக்ரவர்ணனை

(ஸத்ஸந்தானம், ஜன்ம சாபல்யம்)

(சதுர்ப்பி:) நான்கு (ஸ்ரீகண்டை:) சிவ சக்கரங்களாலும் (சம்போ: ப்ரபின்னாபி:) சிவ சக்கரங்களிலிருந்து வேறான (பஞ்சபி:) ஐந்து (ஸிவயுவதிபி:) சக்தி சக்கரங்களாலும் (நவபி:) ஒன்பதாக உள்ளதும் (மூலப்க்ருதிபி: அபி) பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான (தவ) உன்னுடைய (சரண கோணா:) இருப்பிடமாகிய ஸ்ரீசக்ரத்தின் கோணங்கள் (வஸுதல) எட்டு தளம் (கலாச்ர) பதினாறு தளம் (த்ரிவலய) மூன்று வட்டங்கள் (த்ரி-ரேகாபி:) மூன்று கோடுகள் ஆகியவற்றுடன் (ஸார்த்தம்) கூடி (பரிணதா:) பரிணமிக்கும் (சது: சத்வாரிம்சத்) நாற்பத்து நான்காக உள்ளன.

 

பராசக்தியின் யந்த்ரரூபம் ஸ்ரீசக்ரம். அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

ஸ்ரீகண்டை:- (ச்ரிணாதி ஹிநஸ்தீதி ஸ்ரீ: விஷம் கண்டே யஸ்ய அஸௌ ஸ்ரீகண்ட: ஆர: தே கோணோ அபி ஸ்ரீகண்டா:) ஸ்ரீ என்றால் கொல்லும் குணமுடைய விஷம். அதை கழுத்தில் கொண்டவர் ஸ்ரீகண்டராகிய பரமசிவன். அவரைக் குறிக்கும் கோணங்களும் ஸ்ரீகண்டங்கள் எனப்படுகின்றன.


சிவயுவதிபி:- இப்பெயர் பரமசிவபத்னியான பராசக்தியைக் குறிக்கும். அவ்வாறே சக்தி கோணங்களையும் குறிக்கும்.

நான்கு சிவ சக்கரங்கள், ஐந்து சக்தி சக்கரங்கள்

(த்ரிகோண–மஷ்டகோணஞ்ச தசகோணத்வயம் ததா!

சதுர்தசாரஞ்சைதானி சக்தி-சக்ராணி பஞ்ச ச!!

பிந்துச் சாஷ்டதளம் பத்மம் பத்மம் ஷோடாச-பத்ரகம்!

சதுரச்ரஞ்ச சத்வாரி சிவ-சக்ராண்யனுக்ரமாத்!!)

முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினான்கு கோணம் ஆகிய ஐந்தும் சக்தி சக்கரங்கள். பிந்து எட்டு இதழ்கமலம், பதினாறு இதழ் கமலம், நாற்கோணம் ஆகிய நான்கும் சிவசக்கரங்கள் – லலிதா த்ரிசதீ.

ஸ்ரீ சக்ரம் ஒன்பது முக்கோணங்களால் ஆகியது. ஆகையால் கீழ் நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் சக்தி சக்கரங்கள் என்றும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவ சக்கரங்கள் என்றும் இன்னொருவகையில் கொள்ளப்படும்.


ஸமயாசரப்படி வரையப்படும் சிருஷ்டிக்கிரம சக்கரத்தில் நடு முக்கோணம் மேல் நோக்கியது. கௌலாசாரப்படி வரையும் ஸம்ஹாரசக்கரத்தில் நடு முக்கோணம் கீழ் நோக்கியது.


மூலப்ரக்ருதிபி: - ஒன்பது சக்கரங்களும் அண்டமாகிய உலகிற்கும் பிண்டமாகிய உடலுக்கும் மூலகாரணங்களால் ஆன தத்துவங்களைக் குறிப்பவையாதலால் அவை மூலப்பிரகிருதிகள் என்றும், யோனிகள் என்றும் கூறப்படுகின்றன. உடலிலுள்ள மூலப்பொருள்களில் மஜ்ஜை, சுக்லம், பிராணன், ஜீவன் என்ற நான்கும் சிவாம்சம். த்வக்(தோல்,) அஸ்ருக்( இரத்தம்) மாம்ஸம் மேதை(மூளை) அஸ்தி(எலும்பு) என்ற ஐந்தும் சக்தி அம்சம். அண்டத்திலுள்ள மூலக்காரணங்களில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்தும் சக்தி அம்சம். மாயை, சுத்த வித்தை, மகேசுவரன், ஸதாசிவன் என்ற நான்கும் சிவாம்சம்.

 









No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...