ஸ்லோகம் 14
க்ஷிதௌ ஷட்புஞ்சாசத்-த்விஸமதிக-பஞ்சாச-துதகே
ஹுதாசே த்வாஷஷ்டிச் சதுரதிக-பஞ்சாச-தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்சன்-மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம்
ஆதாரச்சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும் (பஞ்சம், கொள்ளை, யோய் நிவிருத்தி)
(க்ஷிதௌ) பூமிதத்துவமாகிய மூலாதாரத்தில் (ஷட் பஞ்சாசத்) ஐம்பத்தாறு (உதகே) ஜலதத்துவமாகிய மணிபூரகத்தில் (த்விஸமதிக-பஞ்சாசத்) ஐம்பத்திரண்டு (ஹுதாசே) அக்னித்தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் (த்வாஷஷ்டி) அறுபத்திரண்டு, (அனிலே) வாயுதத்துவமாகிய அனாஹதத்தில் (ஸதுரதிக-பஞ்சாசத்) ஐம்பத்தி நான்கு, (திவி) ஆகாசதத்துவமாகிய விசுத்தியில் (த்விஷ்ஷட்த்ரிம்சத) எழுபத்திரண்டு, (மனஸி ச) மனஸ்தத்துவமாகிய ஆஜ்ஞையிலோ (சதுஷ் ஷஷ்டி) அறுபத்து நான்கு (இதி) என்று (மயூகா:) கிரணங்கள் (யே) எவை உண்டோ (தேஷாம் அபி) அவைகளுக்கு (உபரி) மேலாக (தவ) உன்னுடைய (பாதாம்புஜ-யுகம்) இரண்டு திருவடிகளும் விளங்குகின்றன.
ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டவை என்றும், அவைகளுக்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தைக் கடந்தவை என்றும் இங்கு குறிக்கப்படுகிறது. மூலாதாரம் 55 நாள் கொண்ட வஸந்த ருதுவிற்கு ஒப்பாகவும், மணிபூரகம் 52 நாள் கொண்ட க்ரீஷ்ம ருதுவிற்கு ஒப்பாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாள் கொண்ட வர்ஷருதுவிற்கு ஒப்பாகவும், அனாஹதம் 54 நாள் கொண்ட சரத் ருதுவிற்கு ஒப்பாகவும், விசுத்தி 72 நாள் கொண்ட ஹேமந்த ருதுவிற்கு ஒப்பாகவும், ஆஜ்ஞை 64 கொண்ட சிசிர ருதுவிற்கு ஒப்பாகவும் வர்ணிக்கப்படுகிறது. பிரம்மாண்டத்தில் நாட்களாயிருப்பவை பிண்டாண்டத்தில் கிரணங்களாய்க் கூறப்படுகின்றன. அக்னிகண்டத்தில் 108 கிரணங்களும் சூரிய கண்டத்தில் 116 கிரணங்களும், சந்திர கண்டத்தில் 136 கிரணங்களும் ஆக மொத்த கிரணங்கள் 360. காலாத்மகமான வருஷத்திலும் நாட்கள் அல்லது கலைகள் 360.
தேவியின் ஸ்தானம் அக்னிகலைக்கும், சூரியகலைக்கும் சந்திரகலைக்கும் அப்பாற்ப்பட்டு அவைகளை எல்லாம் விழுங்கும் ஸ்வரூபம் உடையதாய் விளங்குவது.
ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோSய மக்னி:!
தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி!
அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நக்ஷத்திரங்களும் பிரகாசிப்பதில்லை.
மின்னல் கொடிகளும் பிரகாசிப்பதில்லை. அக்கினி எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள
அப் பரம்பொருளைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்கின்றது. அந்த ஒளியாலேயே இவையனைத்தும்
விளங்குகிறது.

No comments:
Post a Comment